திவ்ய தேசம் - 2 திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்)
************************
இவ்வைணவ திவ்ய தேசம், உத்தமர் கோயில் (அல்லது பிட்சாண்டர் கோயில்) என்ற கிராமத்தில், திருச்சிக்கும் விழுப்புரத்துக்கும் இடையே உள்ள ரயில் பாதையில் அமைந்துள்ளது. திருவரங்கத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது.
புருஷோத்தமன் என்றறியப்படும் இக்கோயிலின் மூலவர், கிழக்கு நோக்கி புஜங்க (பாம்பின் மேல்) சயனத்தில் காட்சியளித்து அருள் பாலிக்கிறார். மஹாவிஷ்ணு, புஜங்க சயனத்தில் 20 திவ்ய தேசங்களில் காட்சி அளிக்கிறார். தாயார் பூர்வதேவி மற்றும் பூர்ணவல்லி என்று அழைக்கப்படுகிறார். வாழை மரத்தை இத்திருத்தலத்தின் தலவிருட்சம் எனப்படுகிறது. இந்த திருக்கோயிலுக்கு நேபஷேத்திரம் மற்றும் ஆதிமபுரம் என்ற பெயர்களும் உண்டு. இங்குள்ள விமானமும், தீர்த்தமும் (குளம்) உத்யோக விமானம் மற்றும் கத(ர)ம்ப தீர்த்தம் எனப்படுகின்றன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியின் ஆறாம் திருமொழி - கைம்மானத்தில் காணப்படும் பாசுரத்தில் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். அப்பாசுரம் இதோ:
1399@..
பேரானைக்* குறுங்குடி எம்பெருமானை*திருதண்கால்
ஊரானைக்* கரம்பனூர் உத்தமனை*முத்திலங்கு
காரார் திண்கடலேழும்* மலையேழ் இவ்வுலகேழுண்டும்*
ஆராதென்றிருந்தானைக்* கண்டது தென்னரங்கத்தே (5.6.2)
இக்கோயிலின் விசேஷம், மும்மூர்த்திகள் எனப்படும் சிவனுன், விஷ்ணுவும், பிரம்மனும் ஒரே இடத்தில் தங்கள் துணைவியருடன் எழுந்தருளியிருப்பது தான் ! அதனாலேயே, இக்கோயில் கதம்ப ஷேத்திரம் எனப்படுகிறது. இங்கு கிடைக்கும், (அரிதாகக் காணப்படும்) நாகலிங்கப்பூ கோயில் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. விஷ்ணு, மகாலஷ்மி தவிர, சிவன், பார்வதி (வடிவுடையம்மன்), பிரம்மா, சரஸ்வதி ஆகியோருக்கு தனி சன்னதிகள் இங்கு உள்ளன. மேலும், ஆண்டாள், வரதராஜர், வேணுகோபாலன், ராமர், விநாயகர், நடராஜர், சுப்ரமணியர், சனீஸ்வரர் மற்றும் ஆஞ்சநேயருக்கு இக்கோயிலில் சன்னதிகள் இருக்கின்றன.
பரமசிவன் குடும்பத்தோடு, பிட்சாதன மூர்த்தியாக இங்கு காட்சியளிப்பது, விசேஷமாகக் கருதப்படுகிறது. திருவரங்கம் கோயில் ஒரு முறை புதுப்பிக்கப்பட்டபோது, திருமங்கையாழ்வார் இங்கு தங்கியிருந்து தான் திருப்பணிகளை பார்வையிட்டார். பாண்டிய மற்றும் சோழ காலத்து கல்வெட்டுகளை இக்கோயிலில் காணலாம்.
ஒரு முறை, கோபத்தில் சிவன் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுத்தபோது, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதாகவும், மகாலஷ்மியிடம் பிட்சை பெற்றதன் மூலம், சிவனுக்கு விமோசனம் கிடைத்ததாகவும் தலபுராணம் கூறுகிறது. மற்றொரு பழங்கதை, மகாவிஷ்ணு இவ்விடத்தில் கதம்ப மர வடிவில் நின்றதாகவும், பிரம்மன் அவரை வழிபட்டதாகவும், பிரம்மனின் கமண்டல நீர் கதம்ப ஆறு என்ற பெயரில் ஓடியதாகவும், பின்னாளில் காதம்ப முனி இங்கு விஷ்ணுவை வழிபட்டதாகவும் கூறுகிறது.
புருஷோத்தமப் பெருமானின் பிரம்ம உத்சவம் சித்திரை மாதத்திலும், சிவபெருமானுக்கான உத்சவம் வைகாசி மாதத்திலும் நடைபெறுகின்றன. மாசி மாத உத்சவ சமயம், ஸ்ரீரங்கத்தின் உத்சவ மூர்த்தி கதம்ப தீர்த்தத்தில் எழுந்தருள்கிறார்.
***************************
என்றென்றும் அன்புடன்
பாலா


